கீழடி2019-03-11T05:19:56+00:00

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தில் மிகவும் பண்பட்ட ஒரு நகர நாகரீகம் இருந்ததற்கான சான்றுகள் இதுவரை நம் சங்க இலக்கியங்களில் காணப்பட்டாலும் முதன்முதலாக அதற்கான அறிவியல் அடிப்படையிலான சான்றுகளைக் கொண்டிருக்கும் இடமே கீழடி. மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிற்றூரான கீழடியில் 2013 இல் தொடங்கப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய முடிச்சை அவிழ்க்கின்றன என்று சொல்லலாம். தமிழகத்தில் முன்பெல்லாம் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் முதுமக்கள் தாழிகளும், மட்பாண்டங்களும் மட்டுமே கண்டெடுக்கப்பட்டதால் தமிகத்தில் மக்கள் வாழிடங்களுக்கான சான்றுகள் இல்லையென்று சொல்லப்பட்டு வந்தது. தமிழகம் மட்டுமல்ல, தென்னிந்தியாவில் அகழாய்வு நடத்தப்பட்ட எந்த இடத்திலும் மனிதர்கள் வாழ்ந்ததற்கான கட்டிடச்சான்றுகள் கிடைத்ததில்லை. அதனை உடைத்திருக்கிறது கீழடி அகழாய்வு. மேலும் இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் பெரும் பாலானவை தமிழ் மொழியில் எழுதப்பட்டவையென்றாலும் தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் எல்லாமே, இந்த மண்ணில் வாழ்ந்த அரசர்களின் பெருமைகளைத் தாங்கிய ஆவணங்களாகவே இருந்துவந்திருக்கிறது. ஆனால், கீழடியில் கிடைத்த பொருட்கள் மட்டுமே மக்களின் வாழ்க்கையைச் சொல்பவையாக இருக்கின்றன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

கீழடியில் கண்டறியப்பட்ட கட்டிடங்கள் பெரிய செங்கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. பட்டினப்பாலை உள்ளிட்ட சங்ககால நூல்களில் குறிப்பிட்டுள்ளபடி, இங்கு உறைகிணறுகள் இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. ஓர் இடத்தில் நீரைத் தேக்கிவைத்தது, அதனை ஒவ்வொரு இடத்திற்கும் கொண்டுசென்றது, அங்கிருந்து கழிவுநீரை வெளியேற்றியது என்று பல தகவல்கள் கீழடியில் கண்டறியப்பட்டிருக்கிறது. மிகவும் நேர்த்தியான இந்த கட்டமைப்பு, சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் மண்ணில் நகர நாகரிகம் இருந்ததாகச் சொல்கிறது. மேலும் இது ஊருக்கு வெளியே இயங்கிய தொழிற்சாலையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. பெண்களின் அழகுசாதனப்பொருட்களும் கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. யானைத்தந்தத்தினால் செய்யப்பட்ட சீப்பு மற்றும்தாயக்கட்டைகள், புருவம் தீட்டும் கருவி, மணிகள் கோர்த்த அணிகலன்கள், முத்துகள் உட்பட பல பொருட்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. கீழடியில் கண்டறியப்பட்ட எந்த ஒன்றிலும் இதுவரை சமய வழிபாடு குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

கீழடியில் இருந்து இதுவரை சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல். ஆனால், அவற்றில் ஏழு பொருட்கள் மட்டுமே இதுவரை மேலை நாடுகளில் கார்பன் -14 பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. அதில் இரண்டு பொருட்களின் காலம் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன்னையது என்பதை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அரசியல் அழுத்தங்களினால் கீழடி அகழாராய்ச்சி முற்றிலும் நிறுத்தப்பட்டு இப்பொழுது சென்னை நீதிமன்ற ஆணைக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டாலும், இந்திய நடுவண் அரசின் ஒப்புதல் கிட்டாமையால் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படாமல் தாமதப்படுத்தப்படுகின்றன. மொத்தத்தில் கீழடி ஆராய்ச்சி முறையாக நடத்தப்பட்டால் தமிழர் வரலாறு எவ்வளவு பழமையானது எனத் தெரிய வரும்.

 

வாருங்கள் பேரவை விழாவிற்கு! தொட்டுப் பாருங்கள்! முனைப்புக் குழுவில் சேருங்கள். மீண்டும் தோண்டவைப்போம்.