32nd Fetna Convention2019-05-17T19:42:19+00:00

சீர்மிகு விழா அறிமுகம்

உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றமும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சிகாகோ தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோ நகரில் 2019 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 4 முதல் 7 ஆம் நாள் வரை நடைபெற இருக்கின்றது.

அமெரிக்க மண்ணில் முதன்முதலாக தமிழுக்காக நடைபெறும் மாநாடு என்பதே இதன் தனிச்சிறப்பு ஆகும். இம்மாநாட்டிற்கு முழுமுதல் கருவியாகவும் கிரியா ஊக்கியாகவும் செயல்பட்டவர் தலைசிறந்த கல்வியாளரும், அண்ணாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், அனைத்துலகத் தமிழாய்வு மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவருமான முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்களையும்,தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான, பிறப்பால் ஐரோப்பியராக இருந்தாலும் உள்ளத்தால் தமிழராய் வாழ்ந்து மறைந்து, இன்று அனைவரின் உள்ளத்தில் வாழும் டாக்டர் ஜி.யு.போப் அவர்களையும் நினைவு கூறும் வகையில் மாநாட்டு ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.

மாநாட்டின் மையக் கருத்து “கீழடி நம் தாய் மடி” என்பதாகும். கீழடியைக் கொண்டாடும் இவ்வேளையில் சிகாகோ தமிழ்ச்சங்கம் தனது பொன் விழா ஆண்டினையும் கொண்டாடுவதில் பெருமை கொள்கின்றது. வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 32-ஆம் தமிழ் விழா என்பது மற்றொரு சிறப்பம்சம்.

“தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையை, புது வரலாற்றியல் நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்.” என்பதே இம்மாநாட்டின் நோக்கம் ஆகும். கீழ்க்கண்ட பிரிவுகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு அறிஞர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

  • செவ்விலக்கியங்கள் (சங்க இலக்கியங்கள்)
  • தமிழரின் பழங்கால நாகரிகம்
  • தொல்காப்பியம்
  • திருக்குறள்
  • அறிஞர் பெருமக்களைப் பற்றிய ஆய்வு
  • தமிழ் இசையும் கலைகளும்
  • தற்காலத் தமிழ் இலக்கியங்கள்
  • தமிழ் மொழியும் மொழியியலும்

மாநாட்டின் சிறப்பம்சங்கள்:

1) வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்தும் கலைநிகழ்ச்சிகள் – சூலை 4 மற்றும் 5
2) ஆராய்ச்சிக் கட்டுரைகள் பற்றிய கருத்தரங்கம் – சூலை 6 மற்றும் 7
3) அமெரிக்கத் தமிழ் தொழில் முனைவோர் கருத்தரங்கம் – சூலை 6
4) சங்கங்களின் சங்கமம் – சூலை 6

உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாக, தமிழர்களின் ஒற்றுமையையும், வலிமையையும் பன்மடங்கு உயர்த்தக் கூடிய வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக இம்மாநாடு அமையும்.

விழாவினைப் பற்றிய தகவல் அறிய

மாநாட்டு திடல்

சாம்பர்க்கு மாநாட்டு மையம்
1551 வடக்கு தோரியவ் சாலை
சாம்பர்க்கு, இலினாய்சு – 60173