திரு. பரமசிவம் பிள்ளை வையாபுரி2019-06-27T06:21:29+00:00

Project Description

மதிப்பிற்குரிய திரு. பரமசிவம் பிள்ளை வையாபுரி
மதிப்பிற்குரிய திரு. பரமசிவம் பிள்ளை வையாபுரி
மொரிசியசு குடியரசுத் தலைவர்

திரு. பரமசிவம் வையாபுரி அவர்கள் கடந்த 4 ஏப்ரல் 2016 இல் மொரிசியசு நாட்டின் துணை குடியரசுத் தலைவராக பதவியேற்றார். தொடர்ந்து 23 மார்ச் 2018 தொடக்கம் நாட்டின் குடியரசுத் தலைவராக பணியாற்றி வருகின்றார். மொரிசியசு தீவு நாடு ஆப்ரிக்க கண்டத்தின் தென் கிழக்கு கடலோரப் பகுதியில் அமைந்துள்ளது. மொரிசியசு தீவில் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழர்கள் வசித்து வருகின்றனர். 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருந்து புலப் பெயர்ந்து மொரிசியசு தீவில் குடியேறிய தமிழர்கள் இந்நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் முதன்மைப் பங்காற்றியுள்ளனர். மொரிசியசின் பணத் தாள்களில் இன்றும் தமிழ் மொழியில் பணத்தின் மதிப்பு விபரங்கள் அச்சிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

2015 முதல் 2016 வரை மொரிசியசு நாட்டிற்கான உயர்நிலை ஆணையராக தென் ஆப்ரிக்க நாட்டில் திரு. பரமசிவம் வையாபுரி அவர்கள் பணியாற்றியுள்ளார். இக்காலகட்டத்தில் தென் ஆப்ரிக்காவிற்கும் மொரிசியசு நாட்டிற்கு இடையேயான அயலுறவு, கூட்டு செயல்பாடுகளை வளர்ப்பதில் அதிகம் வெற்றி கண்டுள்ளார். திசம்பர் 2015 இல் சீன – ஆப்ரிக்க கூட்டமைப்பின் செயல்பாடுகளில் முதன்மைப் பங்கு வகித்துள்ளார். மேலும் மொரிசியசு நாட்டு தொழில் முனைவோர்களுக்கான மாநாட்டினை தென் ஆப்ரிக்காவில் நடத்தியுள்ளார். தென் ஆப்ரிக்காவில் உள்ள ”ரோபன் தீவு அருங்காட்சியகம்”, யுனசுகோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட தொன்மரபு இடங்களில் ஒன்றான மொரிசியசின் ”லே மோர்னே மரபு நிலப்பரப்பு” ஆகியவற்றை உருவாக்கியதில் இவர் முதன்மைப் பங்காற்றியுள்ளார்.

மொரிசியசு பல்கலைக்கழகத்தில் வேளாண்மைக் கல்வியில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள சாம் ஊசுடன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை கல்வியில் பட்டம் பெற்றுள்ளார். 1976 முதல் 1995 வரை மொரிசியசு கல்வி மையத்தில் மூத்த விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். 1996 ஆண்டு முதல் மொரிசியசில் நாட்டில் கல்வி வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்த திரு. பரமசிவம் வையாபுரி அவர்கள் 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆண்டு வரை நாட்டின் கல்வி மற்றும் அறிவியல் துறையின் ஆலோசகராக பணியாற்றினார். இக்காலகட்டத்தில் இடைநிலைப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தியது, புதிதாக முப்பத்தைந்து பள்ளிகளை திறந்து என நான்கு ஆண்டுகளுக்குள் பல்வேறு கல்வி வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். நாடகக் கலையில் மிகுந்த அனுபவம் உள்ள திரு. பரவசிவம் அவர்கள் தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு, சிரோலே உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு நாடகங்களில் நடித்தும், நாடகங்களை தயாரித்தும் உள்ளார். நாடகத் துறையில் இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு. பரமசிவம் வையாபுரி அவர்களின் முன்னோர்கள் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து மொரிசியசில் குடியேறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.