பேரவையின் 31 ஆவது தமிழ் விழா
தில்லையாடி வள்ளியம்மையின் 120 ஆவது பிறந்தாண்டு


thilaiyadi-valliammal

1898 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் நாள் தென் ஆப்ரிக்காவில் உள்ள சோகனசுபேர்க் நகரில் பிறந்தவர் வள்ளியம்மை. இவர் தமிழ்நாட்டின் நாகைப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தில்லையாடியை பூர்வீகமாகக் கொண்டவர். நெசவுத் தொழிலாளியான இவரின் தந்தை திரு.முனுசாமி அவர்கள் பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் தென் ஆப்ரிக்காவிற்கு புலம் பெயர்ந்து அங்கு வணிகத்தில் ஈடுபட்டு வந்தார்.

14 மார்ச்சு 1913 இல் தென் ஆப்ரிக்காவில் கொண்டு வரப்பட்ட “திருமணப் பதிவுச் சட்டத்தின்” கீழ் பதிவு செய்யப்படாத திருமணங்கள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு புலம் பெயர்ந்து வாழ்ந்த பல்வேறு இனத்தவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காந்தி அவர்கள் இந்த அறிவிப்புக்கு எதிராக போராட்டத்தை தொடங்கினார். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு தனது 15 ஆம் வயதிலேயே மிகவும் ஆர்வத்துடன் பல்வேறு இடங்களுக்குப் பயணம் சென்று பரப்புரையில் ஈடுபட்டார் வள்ளியம்மை. 22 திசம்பர் 1913 கசுதூரிபா அறிவித்த அறப்போராட்டத்திலும் கலந்து கொண்டார் வள்ளியம்மை. இப்போராட்டத்தில் சிறை சென்று சிறையிலேயே உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட சூழலிலும் தன்னுடையை போராட்டத்தில் உறுதியாக இருந்த வள்ளியம்மை 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் சிறையில் இருந்து வெளியில் வந்தார். உடல் நிலை மிகவும் மோசமடைய சிறையில் இருந்து வெளிவந்த சில நாட்களில் 22.2.1914 இல் உயிரிழந்தார்.

வள்ளியம்மையின் உடல்நிலை மோசமாக இருந்த காலத்தில் அவரை நேரில் பார்க்க வந்த காந்தி தனது குறிப்பில் ”இந்த வயதில் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு உன் உயிருக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் என்ன செய்திருப்பாய் என வள்ளியம்மையை வினவியதாகவும். என் உயிர் போவது குறித்து நான் கவலை கொள்ளவில்லை, தாய் மண்ணிற்காக உயிர் தியாகம் செய்வதை யார் தான் விரும்பமாட்டார்கள் என வள்ளியம்மை பதிலுரைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு விடுதலைப் போராட்ட உணர்வை ஊட்டியவர் வள்ளியம்மை எனக் குறிப்பிட்டு வள்ளியம்மையின் போராட்ட ஆற்றலை வியந்து போற்றிய காந்தி, தென் ஆப்ரிக்காவில் இருந்து புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் 15 சூலை 1914 இல் சோகனசுபர்க்கில் “வள்ளியம்மை” அவர்களின் நினைவுத் தூணை திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

”மரபு, மகளிர், மழலை” எனும் முழக்கத்துடன் நடைபெறும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 31 ஆவது தமிழ் விழாவை, சிறுவயதிலேயே தன் தாயக மக்களின் உரிமைக்காக போராடி உயிர் கொடை செய்த ஈகி வள்ளியம்மையின் 120 ஆவது பிறந்த ஆண்டு சிறப்பு விழாவாக முன்னெடுப்பதில் பேரவை பெருமை கொள்கின்றது.


பேரவையின் 31 ஆவது தமிழ் விழா
“தந்தை” செல்வா 120 ஆவது பிறந்தாண்டு

selvanayagam

தந்தை செல்வா, ஈழத்து காந்தி என தமிழ் மக்களால் அன்புடனும் மதிப்புடனும் அழைக்கப்படும் திரு. செல்வநாயகம் அவர்கள் 31 மார்ச்சு 1898 இல் மலேசியாவின் ஈப்போ நகரில் பிறந்தார். பிறகு தனது நான்காம் அகவையிலேயே குடும்பத்தினருடன் யாழ்ப்பாணம் வந்தடைந்தார். தனது தொடக்கக் கல்வியை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையிலும், கல்லூரிக் கல்வியை யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் முடித்தார்.

கொழும்புவில் உள்ள புனித தோமையர் கல்லூரியிலும் வெசுலி கல்லூரியிலும் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இலங்கை சட்டக் கல்லூரியில் கல்வி கற்று 1923 இல் சட்ட அறிஞராக பட்டம் பெற்றார். இலங்கையில் புகழ் பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவரான திகழ்ந்த இவருக்கு இலங்கையின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக செயல்படும் வாய்ப்பு இருமுறை கிடைத்த பொழுதும் அவ்வாய்ப்பை ஏற்கவில்லை. தொடர்ந்து 1944 இல் க. கா பொன்னம்பலம் அவர்கள் தொடங்கிய அகில இலங்கை தமிழ் பேராயக் கட்சியில் இணைந்து 1947 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் காங்கேசன்துறை தொகுதியில் வெற்றி பெற்று இலங்கைப் பாராளுமன்றம் சென்றார். 1949 இல் இலங்கை அரசு மலையகத் தமிழர்களின் குடியுரிமையை பறிக்கும் ”இலங்கை குடியுரிமைச் சட்டத்தை” ஏற்றுக் கொண்டது தொடர்பான நிலைப்பாட்டில் அகில இலங்கை தமிழ் பேராயக் கட்சியில் இருந்து வெளியேறினார். 1949 இல் தமிழரசுக் கட்சியை நிறுவி ஏறக்குறைய 28 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் அரசுடன் பல்வேறு ஒப்பந்தங்கள், சனநாயக வழியில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக காந்தி சனநாயக வழியில் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுத்தது போல சிங்கள அரசின் அடக்குமுறைகளில் இருந்து விடுபட இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அனைவரையும் தங்கள் அரசியல் உரிமைகளுக்காக சனநாயக வழியில் போராட ”தந்தை” செல்வா வழிநடத்தினார். 1976 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் தனித் திமிழ் ஈழத்தை கோரும் ”வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை” இவர் தலைமையில் “தமிழர் விடுதலைக் கூட்டணி” மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஈழத் தமிழர்களின் சனநாயக அரசியலுக்கு தலைமை தாங்கிய “ஈழத்தந்தை” செல்வா உடல்நலம் பாதிக்கப்பட்டு 26 ஏப்ரல் 1977 இல் காலமானார். தந்தை செல்வாவின் மேன்மை குறித்து குறிப்பிட்ட இலங்கை தொழிலாளர் பேராயத்தின் தலைவர் திரு தொண்டைமான் அவர்கள் “ செல்வநாயகம் தான் தமிழ் மக்கள், தமிழ் மக்கள் தான் செல்வநாயகம்” என்றார். அன்னாரின் 120 ஆவது பிறந்த ஆண்டினை வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 31 ஆவது தமிழ் விழாவின் சிறப்பு விழாவாக முன்னெடுப்பதில் பேரவை பெருமை கொள்கின்றது.

Hosting Organizations

host1
host2

Texas Supporting Organizations


Click here to learn about FeTNA members organizations